பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங்கீதம்.37:1-5)
மேற்காணும் சங்கீதப் பகுதியை காமராஜபுரம் ஊழியத்தில் சற்று தியானித்தேன்; முதலில் நித்திய ஜீவனைக் குறித்த ஒரு தியானத்தினை யோசித்திருந்தேன்; ஆனாலும் இதிலிருந்து முன்னுரை போல ஒரு தத்துவத்தை சொல்லிப்போக எண்ணி துவக்கினேன்; ஆனால் இதுவே தியானமாகிப் போனது; ஆவியானவருடைய சத்தத்தையும் நடத்துதலையும் கவனித்ததன் பலனை இறுதியில் உணர்ந்தேன்;
ஆம்,அந்த வீட்டின் மூத்த மகன் குமார் வேலையில்லாத துக்கத்தில் இன்று மதியம கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தபோது பிசாசு மின்விசிரியைக் காட்டி தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியிருக்கிறான்;நல்லவேளையாக அவன் கீழ்ப்படியாததால் பிசாசு இன்று தோற்றுப்போனான்;
அவனது தாயோ மகளுடைய திருமணம் தொடர்பான கடன் பிரச்சினையால் மிகவும் சோர்ந்து போயிருந்து துதிவேளையில் கைதட்ட கூட விருப்பமில்லாமலிருந்தார்களாம்;
தத்துவம்:
ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் பல்வேறு ஆசைகள் தோன்றுகிறது;அவை நிறைவேறாவிட்டால் ஏக்கமாகவும் விரக்தியாகவும் மனச்சோர்வாகவும் மாறி மனிதனை துன்புறுத்துகிறது;
ஆனால் ஆண்டவர் "இருதயத்தின் வேண்டுதல்களை" அருள் செய்வதாகக் கூறுகிறார்; "அருள் செய்வேன்" எனும் வார்த்தை இயல்பான தேவ இரக்கத்தினைக் காட்டுகிறது; தகுதியின் அடிப்படையிலல்ல; தமது அன்பின் ஆதாரத்திலிருந்து கிருபையுடன் ஆசி தரும் தேவ சிநேகம்..!
மேலும் நம்முடைய சிந்தையிலுள்ள காரியத்துக்கும் பதில் தருவதாக வாக்கு கொடுக்கிறார்; நாம் எல்லாவற்றையும் வார்த்தையினால் விளக்கிவிடமுடியாது; ஆனால் சிந்தையின் வேகம் அபாரமானது; அதனை ஒழுங்குபடுத்தினால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் ஏராளமாக இருக்கும்.
"அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக" (சங்கீதம்.20:4)
"துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்." (நீதிமொழிகள்.10:24)
இந்த வார்த்தைகளும் மனதிலுள்ள விருப்பங்கள் ஆவியானவரால் கண்காணிக்கப்படுவதையே கூறுகிறது;
"என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்." (சங்கீதம்.139:4)
"மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." (யோவான்.2:25)
ஆம்,நம்முடைய வார்த்தைகளைவிட சிந்தையே தேவனுடைய அற்புதம் விளங்கக் காரணமாக இருக்கிறது; எனவே ஏக்கத்துக்கும் விரக்திக்கும் மனச்சோர்வுக்கும் இடந்தராமல் முதல் கட்டத்திலிருந்து அதாவது விருப்ப நிலையிலேயே காத்திருப்பதுடன் "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு" என்று வேதம் ஆலோசனை கூறுகிறது; ஆம்,மன மகிழ்ச்சி நல்ல ஔஷதம் என்றும் வேதம் கூறுகிறது; அதாவது அதுவே அருமருந்தாம்;
"பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்." என்றும் வேதம் கூறுகிறது; ஆம்,எரிச்சலும் பொறாமையும் நம்மையே நோயாளியாக்கிவிடுவதுடன் நம்து செயல்திறனையும் கெடுத்துப்போடும்;
நாம் என்ன நினைக்கிறோம்,நமக்கு தீங்கு செய்பவனை ஆண்டவர் உடனே அழித்துப்போடவேண்டும் அல்லது அவனே அழிந்து போகவேண்டும்'என்று; ஆனால் அவர்களுக்கென்று ஏகக் கால திட்டத்தினை கர்த்தர் வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோமா?
"அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு." (சங்கீதம்.37:38)
ஆனால் நாம் செய்யக்கூடியதானதொரு காரியம் தொடர்ந்து நன்மை செய்வது;
"கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்."
இதன்படி நாம் நம்முடைய மேய்ச்சலில் கவனமாக இருக்கவேண்டும்; தேவையில்லாத களைகளையும் தளைகளையும் தவிர்த்து புல்லுள்ள இடங்களில் மேய்க்கும் நல்ல மேய்ப்பனுக்கு அடங்கியிருந்து சத்தியமானதில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்; சத்தியத்துக்கு விரோதமானவற்றுடன் போராடக் கூடாது; அது நம்மை சோர்வடையவே செய்கிறது;
எல்லாவற்றுக்கும் மேலாக,"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." என்றும் வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது;
நம்முடைய அனைத்து திட்டங்களையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு அவருடைய ஒப்புதல் கிடைக்கும் வரை நம்பிக்கையுடன் காத்திருக்கவேண்டும்;
இறுதியாக இந்த குறிப்பிட்ட வசனங்களிலிருந்து நாம் செய்யவேண்டிய மூன்று காரியங்களும் ஆண்டவர் நமக்காக செய்யும் இரண்டு காரியங்களுமாக நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை:
1.கர்த்தரில் நம்பிக்கை
2.கர்த்தரில் மனமகிழ்ச்சி
3.கர்த்தரில் ஒப்புவித்தல்
2.கர்த்தரில் மனமகிழ்ச்சி
3.கர்த்தரில் ஒப்புவித்தல்
இவை மூன்றும் நாம் செய்யவேண்டுமாம்.
1.சிந்தைக்கும் பலன் தருவார்
2.செய்தும் தருவார்
இவையிரண்டும் கர்த்தர் நமக்காக செய்வது.
No comments:
Post a Comment