"பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான்.
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.(மாற்கு.10:17 22)இந்த உலகில் ஆசை இல்லாதவர் யாருமில்லை;ஆசை தவறு அல்ல,பேராசையே ஆபத்தானது;
ஒரு முறை ஒரு ஊழியக் குழு கிராமத்துக்கு சுவிசேஷம் அறிவிக்கச் சென்றது; கிராம மக்களிடம் ஆண்டவருடைய அன்பையும் தாங்கள் தேடி வந்த நோக்கத்தையும் கூற, காணாமற் போன ஒரு ஆட்டைத் தேடிய மேய்ப்பனுடைய கதையைச் சொல்லிவிட்டு அந்த மேய்ப்பன் 99 ஆடுகளைவிட்டு ஒரு ஆட்டைத் தேடிச் செல்ல என்ன காரணம் என்று கேட்டாராம்,சுவிசேஷகர்;
இன்று பலருடைய பொதுவான ஆசையானது நீண்ட நாள் வாழவேண்டும் என்பதுதானே; அந்நாட்களில் ஆதாம் முதல் நோவா வரை பல நூறு வருடங்கள் உயிர் வாழ்ந்தனர்: ஆனாலும் தேவன் இந்த உலகின் அக்கிரமத்தினிமித்தம் அதை ஜலத்தினால் அழித்தபிறகு வந்த சந்ததியாரின் வாழ்நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது; மோசே அதிகபட்சம் 120 வருடம் வாழ்ந்தார்; அவரே சொல்லும் போது 70 அல்லது 80 வருடம் என்று சொல்லும் அளவில் வந்து நிற்கிறது; இன்றும் உலகில் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தோரின் வயதைப் பார்த்தால் அது 120 வய்துக்கு மிகாமலிருப்பதைக் காணலாம்;
நாம் வாசித்த வேத பகுதியில் ஆண்டவர் நித்திய ஜீவனைக் குறித்து போதிக்கிறார்; சம்பந்தப்பட்ட ஒருவன் அதிக நாட்கள் வாழ்வதைக் குறித்தல்ல, எப்போதும் வாழ்வதைக் குறித்த யோசனையை ஆண்டவரிடம் கேட்கிறான்; அதாவது அவனுக்கு மரணமில்லா பெருவாழ்வு வேண்டுமாம்; ஆண்டவரும் அன்புடனே கூறுகிறார், கற்பனைகளைக் கைக்கொள் என்று; அவனும் சளைக்காமல் அவற்றை சிறுவயது முதலே கைக்கொண்டு வருவதாகக் கூறுகிறான்; ஆனாலும் அவன் பணக்காரனாக இருந்ததால் ஆண்டவர் அடுத்து கூறிய காரியத்தைக் கேட்டு துக்கத்துடன் போய்விட்டானாம்; ஆண்டவர் சொன்னது,"உன் சொத்துகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடு"
ஆண்டவர் இங்கே கைக்கொள்ளவேண்டிய கற்பனைகளாக ஆறு மட்டுமே சொல்ல ரொம்ப சந்தோஷமாக அவைகளையெல்லாம் கைக்கொண்டு வருவதாக எளிதாகச் சொல்லிவிட்டான்; ஆனால் முதலாம் கற்பனையினைச் சொல்லவில்லையே, அது என்ன ? என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்பதே; அதுதான் துக்கத்துக்குக் காரணம்; இவனுக்கு இவன் ஆஸ்தியும் சம்பாத்தியமுமே தேவர்களாக இருந்தார்கள்; அதனை ஆண்டவர் விடச் சொன்னதால் துக்கம் வந்தது;
ஆனாலும் பரலோகம் என்றால் எல்லாருக்கும் ஆசைதான்; அதைக் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லுவதுண்டு; ஆனால் அங்கே எந்த பிரிவினையும் ஏற்றத் தாழ்வும் இருக்கப்போகிறதில்லை; ஆண்டவர் சொல்லும் போது மிக எளிமையாக, "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்."(யோவான்.14:3) என்றே சொல்லுகிறார்;
பரலோகத்தைக் குறித்த ஒரு கற்பனை கதையுண்டு; இரண்டு பேர் மரித்து பரலோகம் சென்றனர்; வழக்கம் போல பேதுரு அவர்களை வரவேற்று விசாரித்தார்;
ஒருவர் சொன்னார்,"நான் ஒரு ஆட்டோ டிரைவர்" உடனே பேதுரு அவனை நீச்சல் குளத்துடன் கூடிய ஒரு பெரிய மாளிகையில் கொண்டுவிட ஒரு தூதனுக்குக் கட்டளையிட்டார்;
அடுத்தவர் கூறினார், "நான் ஒரு பெரிய பாஸ்டர்" இப்படி கூறும் போது பாஸ்டருக்குள் 'ஆட்டோ டிரைவருக்கே அத்தனைப் பெரிய மாளிகையென்றால் தமக்கு இன்னும் பிரமாண்டமான அரண்மனையே காத்திருக்கும்' என்று கற்பனை சிறகு விரிந்தது; ஆனால் பேதுருவோ அவருக்கு ஒரு சிறிய தனி அறையை ஒதுக்க, பாஸ்டருக்குக் கோபம் வந்துவிட்டது; நியாயம் கேட்டுப் போராடினார்; பேதுரு அவரை சமாதானப்படுத்தி இப்படி விளக்கினார், "ஐயா,நீங்க நல்லா ஊழியம் செய்தீங்க, ஆனா உங்க ஜனங்க ஆண்டவரிடம் திரும்பல, நீங்க பிரசங்கம் பண்ணினா தூங்கினாங்க, சபை முடிந்து வீட்டுக்குப் போனதும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாங்க, உங்க ஊழியத்தால அவங்க வாழ்க்கையில் எந்த மாற்றமும் வரவில்லை; ஆனா இந்த ஆட்டோ டிரைவரோ அப்படியல்ல அவன் வண்டிய ஸ்டார்ட் பண்ணவுடனே பயணி உயிர் பயத்தில் ஜெபிக்கத் துவங்கிவிடுவார் அந்த அளவுக்கு பயங்கரமா வண்டிய ஓட்டி ஜனங்க ஆண்டவரைத் தேட வைத்தானே" என்றாராம்;
இப்படி எல்லோருக்குமே நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசையும் மரணத்துக்குப் பிறகு ஒரு நல்ல இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு; அதற்கு வேதம் சொல்லும் யோசனை என்ன என்பதை சிந்திப்போமாக;
1.வசனத்தைக் காத்துக் கொள்ளுதல்
வேதம் சொல்லுகிறது,"என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்,அப்பொழுது பிழைப்பாய்."(நீதிமொழிகள்.7:2)
"பிழைப்பாய்" எனும் வார்த்தையே நித்திய ஜீவனைக் குறிக்கும் வார்த்தை;ஆம்,வேத வசனத்தைக் கைக்கொள்ளாமல் மரணத்துக்குத் தப்பமுடியாது;ஏனெனில் இது நித்திய ஜீவனுக்கான வசனம்;
ஆண்டவருடைய போதனை கடினமானதாக இருந்தது என அநேகர் போய்விட்டனர்;ஆனால் பேதுரு சொல்லும் போது,"... ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே."(யோவான்.6:68)
மேலும் "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது."(யோவான்.6:63)என்று ஆண்டவரும் சொல்லுகிறார்;
"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்."(1.கொரிந்தியர்.15:19) என்று பவுலடிகளும் கூறுகிறார்;
வசனமே இளைப்பாறுதலைக் கொடுக்கிறது;"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."(மத்தேயு.11:28)
இது நம்முடைய ஆண்டவருடைய அன்பான அழைப்பு;இங்கே பாரம் என்பது எது? மனிதனை அழுத்திக் கொண்டிருக்கும் நான்கு முக்கிய பாரங்கள் உண்டு;
1.பாவ பாரம்
2.சடங்காச்சாரங்கள்
3.உபத்திரவங்கள்
4.மெய்யான தெய்வத்தை தேடுதல்
ஆனால் ஆண்டவருடைய வசனமோ இளைப்பாறுதலைத் தருவதுடன் நித்திய ஜீவனையும் தருகிறது;எனவே வேதத்தை முறையாக வாசித்துப் பழகவேண்டும்;
சென்ற நூற்றாண்டின் பிரபல போதகர் தனது வாழ்நாளில் 300 முறை வேதத்தை வாசித்து முடித்தவராம்;அதில் அவர் முழங்காலிலிருந்து வேதத்தை வாசித்தது 100 முறையாம்;
நாமும் இதுபோன்ற நல்ல தீர்மானங்களை எடுத்து நிறைவேற்றினால் நித்திய ஜீவனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
2.அழைப்பை நிறைவேற்றுதல்
"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது;நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது."(யோவான்.10:27)
இதுவே நம்முடைய ஆண்டவருடைய எதிர்பார்ப்பு;ஆண்டவர் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக நம்மை அழைத்திருப்பாரானால் அந்த நோக்கம் மாறவே மாறாது;நாம் அதற்காகக் காத்திருந்து அதை நிறைவேற்ற வேண்டும்;
மேலும் அவரைப் பின்பற்றுவதினால் மாத்திரமே நித்திய ஜீவனை சுதந்தரிக்கமுடியும்;அவரைப் பின்பற்றுவது என்பது அவரை நேசிப்பதும் அவர் நடந்தபடியே தானும் நடப்பதுமாகும்;
ஆடுகள் மேய்ப்பனுடைய சத்தத்துக்கு செவிகொடுத்து நடப்பதுடன் மேய்ப்பன் நடத்திச் செல்லும் இடம் இன்னதென்று அறியாதிருந்தாலும் நம்பிக்கையுடன் பின்செல்லுகிறது;
விலகிச்செல்லும் ஆடுகளோ மந்தையிலிருந்து ஐக்கியத்தையும் போஷிப்பையும் இழக்கிறது;ஆபத்திலும் சிக்கிக் கொள்கிறது;
ஆனால் மேய்ப்பனைப் பின் தொடரும் ஆடுகளோ பாதுகாப்பாக இருக்கிறது;நாமும் கூட ஆண்டவரை இதுபோன்ற நிலையிலிருந்து பின்பற்றுவோமானால் நித்திய ஜீவனை அடைவது நிச்சயம்.
3.விசுவாசத்தைக் காத்துக் கொள்ளுதல்
நித்திய ஜீவனை அடைய உதவும் மற்றுமொரு குணாதிசயமாக ஆண்டவர் சொன்னது,விசுவாசமாகும்;
"என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."(யோவான்.5:24)
பிதாவாகிய தேவனை விசுவாசிப்பது நித்திய ஜீவனை அடைய உதவும்;அதுமாத்திரமல்ல,இயேசுவை விசுவாசிப்பதும் அவசியமாகும்;யோவான் ஸ்நானன் கூறும்போது, "குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்."(யோவான்.3:36)
இன்றைய நவீன கால பாதிப்பினால் வேதாகம கல்லூரிகள் தவறானவற்றைப் போதிக்கத் துணிகிறது;அவர்கள் எப்படியாவது உலகத்துடன் ஒத்துப்போகவும் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ளவும் முயற்சித்து வேதத்தையே திரித்து விடுகிறார்கள்;
உதாரணமாக இயேசு கலிலேயா கடலின் மீது நடந்தார் என்பது பெரிய அற்புதமாக இருந்திருக்க வாய்ப்பில்லை; அது ஆங்காங்கே மணல் திட்டுகளுடனும் சுமார் இரண்டடி அளவே ஆழமுமாக இருக்கும்; இதனை நன்கு அறிந்த இயேசு அந்த மணல் திட்டுகள் மீது நடந்துவந்தார் என்று போதிக்கின்றனர்; நம்மை தடுமாறச் செய்யும் இதுபோன்ற புதிய போதனைகளை ஒதுக்கிவிட்டு தொடர்ந்து விசுவாசத்தில் வளரவேண்டும்; ஆனால் அது இன்றும் சுமார் 150 அடி ஆழமுள்ள "பேசின்"வடிவான நீர் நிலையாகவே இருக்கிறது;
ஆண்டவரை விசுவாசிப்பதால் மட்டுமே பிழைக்க முடியும் என்பதற்கு இஸ்ரவேலருடைய வனாந்தர பயணத்தில் நிகழ்ந்ததொரு காரியம் நல்ல சான்றாகும்;ஆண்டவர் மீது அதிருப்தி கொண்டு முறுமுறுத்த இஸ்ரவேலரை தண்டிக்க தேவன் கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பினார்;மோசே ஆண்டவரை நோக்கி ஜெபித்தபோது ஜனங்கள் பிழைக்க வெண்கல சர்ப்பத்தை செய்து வனாந்தரத்தில் உயர்த்தி வைக்கச் சொன்னார்;அதை நோக்கிப் பார்த்தவரெல்லாம் பிழைத்தனர்;அதாவது கடிபட்ட பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்காமல் தீர்வை நோக்கி பார்க்கவேண்டும் என்பதே ஆண்டவருடைய திட்டமாகும்;இதுபோல தற்கால போராட்டங்களை மேற்கொள்ள நமக்காக சிலுவையில் பலியான இயேசுவை விசுவாசத்தோடு நோக்கிப் பார்க்கவேண்டும்;
மரத் தொட்டியில் பிறந்த இயேசு மரச் சிலுவையில் நமக்காக அனைத்தையும் செய்து முடித்தார்;
வேதத்தின் முழு சாராம்சத்தினையும் சில வரிகளில் சொல்லக்கூடிய "குட்டி வேதாகமம்" என்ன சொல்கிறது,"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."(யோவான்.3:16) இதனை நம்பி விசுவாசிப்பதே நாம் நித்திய ஜீவனை அடைய உதவும்.
4.நற்கிரியைகளைச் செய்தல்
"நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்."(எபேசியர்.2:10)
நற்கிரியைகளைச் செய்வதே நாம் சிருஷ்டிக்கப்பட்ட நோக்கமானால் அதன்மூலம் நித்திய ஜீவனைப் பெறுவோம் என்பது அதிக நிச்சயமாம்;
"சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்."(ரோமர்.2:7)
மன உறுதியுடன் நற்காரியங்களைச் செய்யவேண்டும் என புதிய மொழிபெயர்ப்பில் வாசிக்கிறோம்;
நாம் செய்யக்கூடிய நற்கிரியைகளில் முதன்மையானது சுவிசேஷம் அறிவித்தலே;
மேலும்,"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்."(கலாத்தியர்.6:9) என்று பவுலடிகள் உறுதியளிக்கிறார்;
"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்."(யாக்கோபு.1:22)என்றும் "கிரியையில்லாத விசுவாசம் செத்தது" என்றும் யாக்கோபு கூறுகிறார்;
நியூயார்க் நகரத்தில் 63 ஒரு வயதான ஒருவர் மரித்துப்போனார்; அவர் ஒரு பிரபலமான ஆளல்ல; ஆனாலும் நகரத்திலுள்ள அத்தனை செய்தியாளர்களும் மக்களுமாக அங்கே குவிந்துவிட்டனர்;
காரணமென்ன? அவர் பெரிய படிப்பாளி; அவருடைய பட்டங்களை அவருடைய பெயருக்குப் பின்னால் எழுதினால் அது மூன்று முறை A to Z எழுதியது போலிருக்கும்; அவ்வளவு படித்திருந்தும் அவர் எந்த வேலைக்கும் போகவில்லை;
காரணம் என்ன தெரியுமா? அவருடைய மாமா ஒருவர் அவருக்கு சொத்து எதையும் எழுதி வைக்காமல் 'அவர் படிக்க மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளலாம்' என்று உயில் எழுதி வைத்து இறந்ததுதான்; அதனைப் பயன்படுத்திக் கொள்ளவே இவ்வளவு படித்தாராம்;
இதுபோலவே ஆண்டவரை அறிந்தும் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டும் செயல்படாதோரால் ஆண்டவருக்கு எந்த பயனும் இராது; நாம் செய்யும் நற்கிரியைகளோ நித்திய ஜீவனுக்கு நம்மை நடத்தும்.
5.விட்டுவிடுதல்
இது மிகவும் சிரமமான காரியமாகத் தோன்றும்;ஆனாலும் இதுவே நித்திய ஜீவனுக்கு நம்மை தகுதிப்படுத்தும்;
பேதுரு,"இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,
இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."(மாற்கு.10:28 30)
ஆம் ஆண்டவரைப் பின்பற்றும்போது நூறத்தனையாக இங்கும் மறுமையில் அதற்கு அதிகமாகவும் தருவாராம்;
ஐசுவரியமும் பண ஆசையும் நித்திய ஜீவனுக்குத் தடையாகும் எனில் இதன் ஈர்ப்பிலிருந்து விடுபடுதல் நித்திய ஜீவனுக்கு ஆதாரமாகும்;வெறுத்துவிடுதலும் விட்டுவிடுதலுமே மனுக்குலத்தின் சவால் மிகுந்த சோதனையாகும்;முதலிடத்தில் தேவ காரியங்களையும் உலகத்தை அடுத்ததாகவும் வைத்துப் பார்த்தாலே அதன் அருமை புரியும்;
எளிமையான தொடரும் விசுவாசம் எந்த சூழ்நிலையையும் மேற்கொள்ள உதவும்; ஆண்டவரை நம்பாத ஒரு ஆசிரியர்; அவருடைய மாணவியோ ஆண்டவர் மீது மாறாத விசுவாசமுடையவள்; அந்த ஆசிரியர் எப்போது பார்த்தாலும் அந்த மாணவியை பரியாசம் பண்ணும் வண்ணமாக எதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்;
ஒரு நாள் இப்படியே, "அந்த யோனா கதையை எப்படித தான் நம்புகிறீர்களோ, ஒரு மனுஷன் மீன் வயிற்றில் எப்படி 3 நாட்கள் இருக்கமுடியும்" என்றாராம்; அந்த மாணவி சொன்னாள்,"நான் எனது வேதத்தை முழுமையாக நம்புகிறேன், அது பொய் சொல்லாது, அப்படியே எதாவது சந்தேகமிருந்தாலும் நான் பரலோகத்துக்குச் செல்லும் போது யோனாவைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுவேன்" என்றாள்; அவரும் விடாமல் "ஒருவேளை யோனா நரகத்திலிருந்தால் என்ன செய்வாய்" என்றார்; மாணவி சற்றும் தாமதிக்காமல் சொன்னாள், "நீங்களே கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாமே" என்று.
"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்."(1.Jo 5:11,12)
இதுவே நமது விசுவாசத்தின் இறுதி அறிக்கையாக இருக்கட்டும்;இந்த விசுவாசத்தினால் நமக்கு நித்திய ஜீவன் நிச்சயமாகவே உண்டாயிருக்கும்.
No comments:
Post a Comment