"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" (எசேக்கியேல்.33:24)
வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்துள்ள நமக்கு இந்த வார்த்தை விசேஷித்த உற்சாகத்தைக் கொடுக்குமா? ஒருவேளை இதுவே வருடத்தின் ஆரம்பமாக இருந்திருக்குமானால் மிகுந்த சந்தோஷமாக இதனை வாக்குத்தத்தமாக ஏற்றுக்கொண்டிருப்போம்; இந்த வசனம் குறிப்பிட்ட பகுதியின் நடுவில் இந்த ஒரு வரி மாத்திரம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது;
எனக்கு அருமையான நண்பர்களே, நம்முடைய ஆண்டவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்,
" தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது " (2.நாளாகமம்.16:9) என்று நாம் வாசிக்கிறவண்ணமாக இந்த வார்த்தையானது நமது உள்ளத்தை அசைக்குமானால் நமக்கும் ஆண்டவர் தரப்போகும் வெற்றிக்காகப் பொறுமையாகக் காத்திருப்போம்;
"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" என்று வாசித்தோம்; சரி, ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக வேதம் கூறுவது என்ன?
"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்." (ஏசாயா.51:2 )
இங்கே நாம் வாசிக்கிறோம், ஆபிரகாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாலேயே தேசத்தை சுதந்தரிக்க முடிந்தது; ஆனால் அவனது சந்ததியாரோ தேவச் செயலை மறந்து சுயம் சார்ந்த ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து தேவனைக் கோபப்படுத்தினர்; எனவே அவர்களை சத்துருக்களின் கைக்கு ஒப்புக்கொடுத்தார்; ஆனாலும் அவர்களை வெறுத்துவிடாமல் தீர்க்கர்களின் மூலம் அவர்களை உணர்த்தி நல்(தம்)வழிப்படுத்தவும் விரும்புகிறார்; இதுவே ஒரு தகப்பனின் இருதயமாகும்;
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதால் ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்க முடிந்தது எனில் கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதிக்கக் காரணமாக இருந்தவற்றில் அவனுடைய பங்கு என்ன என்பதையும் தியானிப்போமாக.
ஏனெனில் தேசத்தை சுதந்தரிப்பது என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வார்த்தையின்படி நிலங்களையும் பொன் பொருள்களையும் சொந்தமாக்கிக் கொள்வது மட்டுமல்ல; நமக்கு சுதந்தரமான கிறிஸ்துவை இந்தியர் அனைவருக்கும் சுதந்தரமாக்குவதே மெய்யான சுதந்தரமாகும்;
எனவே இந்த சுதந்தர உணர்வு சாதித்த உணர்வாக ருசிக்கப்பட வேண்டுமானால் ஆபிரகாமின் வெற்றியிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்;ஆபிரகாமின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது என்ன என்று தியானிப்போமா?
1. விசுவாசம்
ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்தது,அவனிடம் காணப்பட்ட விசுவாசமே என்றால் அது மிகையல்ல;எனவே வேதம் சொல்லுகிறது,
"அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்." (கலாத்தியர்.3:9)
விசுவாசம் சோதனையில்லாமல் பூரணப்படாது வேதத்தின் விதியாகும்; நம்மைக் காக்கும் விசுவாசத்தை நாம் காத்துக்கொள்ளவேண்டும்; ஆபிரகாமின் உச்சக்கட்ட விசுவாசத்தை எங்கே காண்கிறோம்; அது அவன் தனது சேஷ்டபுத்திரனும் ஏக சுதனுமாகிய பலியாக ஒப்புக்கொடுத்த இடத்திலே வெளிப்பட்டது;
தனக்கு ஒரு பிள்ளையைத் தருவதாக வாக்களித்த தேவன் அதையும் அவனது முதிர்வயதில் கொடுத்தபோது அவன் அடைந்த சந்தோஷத்தை முற்றிலும் மாற்றிப்போடும் வகையில் அந்த பிள்ளையையே பலியாக ஆண்டவர் கேட்பாரானால் எவ்வளவு இக்கட்டான நிலை? ஆனாலும் அந்த சூழ்நிலையை மேற்கொள்ள அவனால் முடிந்தது;
தன் பிள்ளையை வெட்ட அவன் தனது கையை ஓங்கியபோது அவனது மனம் எப்படி துடித்திருக்கும்? ஏனெனில் இராஜாவான சாலமோனுடைய நாட்களில் அவனிடம் ஒரு விசித்திர வழக்கு வந்தது; இரு தாய்மார் ஒரு பிள்ளைக்கு சொந்தங்கொண்டாடினார்கள்; சாலமோனோ உண்மையான தாயைக் கண்டுபிடிக்க வேண்டி ஒரு காரியம் சொன்னான், அந்த குழந்தையை இரண்டாகப் பிளந்து இரு தாய்மாருக்கும் ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிடச் சொன்னான்; வேதம் சொல்லுகிறது,
"அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; " (1.இராஜாக்கள்.3:26 )
ஆம், தன் பிள்ளையை இரண்டாக வெட்டப்போவதையறிந்ததும் அந்த உண்மையான தாயின் குடல் துடித்ததாம்; அது போலவே ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியிட கையை உயர்த்திய போது அவனது இருதயம் துடித்திருக்கும்; ஆனாலும் ஆண்டவர் மீதான தனது விசுவாசத்தை நிரூபிப்பதிலேயே அவன் கவனம் முழுவதும் இருந்தது; அதனாலேயே ஆபிரகாம் நீதிமான் என்று எண்ணப்பட்டான்; தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டான்.
2.வாக்குத்தத்தம்
ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த இரண்டாவது காரியம், ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாக நம்பியது; வேதம் சொல்லுகிறது,
"மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்."(எபிரெயர்.11:17,18,19)
எந்த சூழ்நிலையிலிருந்து ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பினான்? வேதம் சொல்லுகிறது,
"இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப்பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்." (அப்போஸ்தலர்.7:5)
நம்புவதற்கும் விசுவாசிப்பதற்கும் காத்திருப்பதற்கும் ஏதுவில்லாதிருந்த சூழ்நிலையிலேயே ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பினான் என்றும் வேதம் சொல்லுகிறது; ஒரு அடி நிலமும் இல்லாத நிலையில் தேசத்தையே சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று ஆண்டவர் சொன்னதை நம்பினான்;
எனக்கு அருமையான நண்பர்களே இன்றைக்கு நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் ஒரு அடி நிலமும் ஒரு காசும் இல்லாத நிலையில் இந்த வாக்கு உங்களை நோக்கி வருகிறது;என் தேவன் எனக்கு இதுபோல செய்ய வல்லவர் என்று நம்புவீர்களா? அவருக்காகக் காத்திருப்பீர்களா? ஆண்டவர் நிச்சயம் அற்புதம் செய்வார்;
பவுலுடன் இரவெல்லாம் ஆண்டவர் பேசினார்,உற்சாகப்படுத்தினார்;ஆனால் காலையில் வந்த செய்தி என்ன? பவுலை கொலை செய்யாமல் உண்பதில்லை என்று யூதர்கள் சபதம் எடுத்திருந்தனர்;பவுலோ சிறிதும் கலங்கவில்லை;நாம் வாக்குத்தத்தத்தைப் பெற்று உற்சாகத்துடனிருக்கும் நேரமே நம்மை சஞ்சலப்படுத்தும் செய்திகள் வரும்;ஆனாலும் முன்னேறியே செல்லவேண்டும்;
ஒரு சில சூழ்நிலைகளில் எல்லோரும் கைவிட்ட நிலையில் ஆண்டவரே தேற்றுகிறார்;யாக்கோபுடைய வாழ்க்கையில் தகப்பனால் வெறுக்கப்பட்டும் சகோதரனால் துரத்தப்பட்டும் தாயாரும் அனுப்பிவிட்ட நம்பிக்கையற்ற இரவில் வனாந்தரத்தில் தேவன் அவனை சந்தித்தார்,"நான் உன்னோடிருப்பேன்" என வாக்கு கொடுத்தார்; ஆபிரகாமும் கூட இவ்வாறே வாக்குத்தத்தங்களை விடாமல் பற்றிக் கொண்டதாலேயே தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டான்;
3.தொழுகை
ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த மூன்றாவது காரியம்,அவன் தேவனைத் தொழுதுகொள்ளுபவனாக இருந்ததாகும்;வேதம் சொல்லுகிறது,
"ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்." ( ஆதியாகமம்.21:33 )
ஆம்.தொழுதுகொள்ளுதல் என்பது விசுவாசத்தின் ஆதாரக் கிரியையாகும்;அது அனைத்து சம்பவங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டது;ஏதோ ஒன்றை செய்தலல்ல;ஆண்டவரை ஆராதிப்பது என்பது ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையின் உரிமையாகும்;அதுவே தேவனுடனுள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் கிரியையாகும்; தொழுகை என்பது என்ன? வேதம் சொல்லுகிறது,
" நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்."(சங்கீதம்.116:17)
ஆம்,தொழுகை என்பதில் முக்கிய பங்கு வகிப்பது "ஸ்தோத்திர பலி" செலுத்துவதே; தற்காலத்தில் 1000 ஸ்தோத்திர பலிகள் செலுத்துவது வழக்கமாக இருக்கிறது; அதில் 1000 ஸ்தோத்திர பலிகள் சொல்லி முடித்தபிறகு சொன்னவரின் மனநிலை எப்படியிருக்கும்?அதுபோன்ற திருப்தியுணர்வுக்காக அல்ல,உள்ளத்தில் ஆனந்தம் வந்தமரும் வரை துதிப்பதே சிறப்பானதாகும்;
வழக்கமாக இயல்பாக ஸ்தோத்திரம் செலுத்துவதைத் தவிர சிறப்பாக ஸ்தோத்திர பலியைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம் என்று சொல்லும் போது ஒரு விசேஷித்த பெலன் பெருகுவதை அனுபவிக்கமுடியும்; இதனால் பிசாசின் கட்டுகளுக்கு எதிராக ஒரு விசேஷித்த வல்லமை இறங்குவதையும் உணரமுடியும்;
4.ஜெபம்
ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த நான்காவது காரியம், அவனுடைய ஜெப வாழ்க்கையாகும்; ஜெபத்தின் மேன்மையைக் குறித்த வேதத்தின் போதனைகளைக் குறித்து அதிகமாகவே அறிந்திருக்கிறோம்;வேதம் சொல்லுகிறது,
"ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்." (ஆதியாகமம்.20:18)
ஆபிரகாமின் ஜெப வாழ்க்கையைக் குறித்து நாம் அறிந்திருக்கக்கூடிய காரியங்களில் இது மிகவும் வித்தியாசமானதாகும்; அதாவது தனக்கு தீங்கு செய்த அரசக் குடும்பத்துக்காக வேண்டுதல் செய்கிறான்; கர்த்தருடைய பிள்ளைகள் ஜெபிக்கும் போது அதைக் கேட்பதற்கு ஆண்டவர் ஆவலாக இருக்கிறார்;
இயேசுவானவர் இந்த பூமியில் வாழ்ந்தபோது அவருடைய ஜெபத்தால் வானம் திறந்ததாக வேதம் சொல்லுகிறது; ஆம்,நாமும் வேண்டிக்கொள்ளும்போது வானம் திறக்கிறது; ஜெபம் என்னும் போது யாபேஸைக் குறித்து நிச்சயம் தியானிப்போம்;யாபேஸின் ஜெபத்தில் ஒரு கவனிக்கத் தகுந்த காரியம், வேதம் சொல்லுகிறது,
"யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்."(1.நாளாகமம். 4:10 )
இந்த வேத வசனத்தில் யாபேஸைக் குறித்துச் சொல்லப்படும் ஒரு காரியம்,மீண்டும் மீண்டும் வரும் 'என்னை','என்' போன்ற வார்த்தைகள்; இது ஐந்து முறை வருகிறது; இது சுயநலம் போலத் தோன்றுகிறதல்லவா? ஆனாலும் வேதம் சொல்லுகிறது,
"நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு." (எசேக்கியேல்.38:7 )
ஆம்,தேவனுடைய பிள்ளைகளின் வழியாகவே நம்மைச் சார்ந்த சமூகம் ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்பது தேவ சித்தமாகும்;அப்படியானால் நாமே நம்முடைய ஆசீர்வாதத்துக்காக வேண்டுதல் செய்ய
வேண்டியவர்களாக இருக்கிறோம்; அதனை அப்படியே அருளிச் செய்ய தேவன் ஆயத்தமாகவே இருக்கிறார்;
கடந்த வருடத்தில் கர்த்தருக்குள் நித்திரையடைந்த சகோதரன் DGS.தினகரன் அவர்கள் தனது கடைசி புது வருட செய்தியில் இந்த யாபேஸின் ஜெபத்தையே போதித்து மக்களைனைவரையும் சொல்லவும் செய்தார்;மாத்திரமல்ல, 'இந்த ஜெபத்தைத் தொடர்ந்து சொல்லுங்கள், இந்த ஜெபம் உங்கள் தலையெழுத்தையே மாற்றிவிடும்' என்றாராம்; வேதம் சொல்லுகிறது, காலேபின் மகள் தன் தகப்பனை நோக்கி, "...எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்."
ஆம்,நம்முடைய சூழ்நிலை கர்த்தர் அனுமதித்த காரியங்கள் கடினமானதாக இருப்பினும் ஆண்டவரை நோக்கி தாழ்மையுடன் வேண்டிக்கொண்டால் காரியத்தை சாதகமாக மாற்றுவார்; வறட்சியும் செழிப்பாகும்.
5.பிரஸ்தாபித்தல்
ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த இறுதியான ஐந்தாவது காரியம்,அவன் கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபிக்கிறவனாக இருந்தான்;வேதம் சொல்லுகிறது,
"நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்." (ஆதியாகமம்.20:24)
ஆபிரகாமும் கூட இவ்வாறே ஆண்டவருக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு கர்த்தருடைய நாமத்தைக் குறித்த தனது அனுபவத்துடன் கூடியதொரு பெயரை வைக்கிறான்; தனது மகனைத் தான் பலியாகக் கொடுக்காமல் மீட்டுக்கொள்ளவும் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிய திருப்தியுடன் திரும்பிச் செல்லவும் உதவி செய்த தேவனுக்கு "யெகோவா யீரே" எனப் பெயரிட்டு கர்த்தர் தம்முடைய தேவைகளையெல்லாம் சந்திக்க வல்லவர் என்று அறிக்கை செய்தான்;
"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவா-யீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது."
(ஆதியாகமம்.22:14 )
ஆம், கடைசி நிமிடத்தில் கூட இடைபட்டு ஆண்டவர் தமது வல்லமையினை விளங்கப்பண்ணி நம்மை சந்தோஷப்படுத்துவார்; மாத்திரமல்ல, நன்மையாகவும் முடியப்பண்ணுவார்; யோசேப்பைக் குறித்து வேதம் சொல்லுகிறது,
"நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." (ஆதியாகமம்.50:20 )
ஆம், நண்பர்களே நம்முடைய சூழ்நிலை எதுவாக இருப்பினும் நாம் அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபிக்கும்போது அவரும் நம்மை உயர்த்துவார் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment