சென்னை: இரண்டு கால்களும் செயலிழந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு அரசு பொது மருத்துவமனையில், இரட்டை அறுவை சிகிச்சைகள் செய்து, தாய் - சேய் ஆகியோரை டாக்டர்கள் காப்பாற்றினர்.
ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுகவனம். இவரது மனைவி ஈஸ்வரி (27) கர்ப்பிணியாக இருந்தார். திடீரென்று ஈஸ்வரிக்கு முதுகு வலியும், இரண்டு கால்களும், உணர்ச்சியற்றுப் போனதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், பெரும்மந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கடந்த மாதம் 25ம் தேதி ஈஸ்வரியை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அரசு பொது மருத்துவமனையில், மூளை மற்றும் நரம்பியல் துறை தலைமை டாக்டர் அருண் குமார், ஈஸ்வரிக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பரிசோதித்தார். அதில், ஈஸ்வரியின் தண்டுவடத்தில் ரத்தக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈஸ்வரி கர்ப்பிணி என்பதால் நரம்பியல் துறை டாக்டர்கள் தாய், சேய் நல மருத்துவர்களை கலந்தாலோசித்து சிகிச்சை அளித்தனர். முதலில் ஈஸ்வரிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. ஆண் குழந்தை எட்டு மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டதால் குழந்தை 1.8 கிலோ எடை மட்டுமே இருந்தது. அதனால் குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி இன்குபேட்டரில் வைக்கப்பட்டது.
சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்ததும், அதே தினத்தில் உடனே நரம்பியல் மருத்துவர்கள் ஈஸ்வரியின் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து ரத்தக் கட்டியை எடுத்தனர். இரண்டு அறுவை சிகிச்சைகளும் இரண்டு மணி நேரம் நடந்ததாகவும் இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வேணி கூறினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81404
1 comment:
இரு அறுவைச் சிகிச்சைகளையும் செய்து முடித்த வைத்தியர்களுக்குப் பாராட்டுக்கள்.
Post a Comment