மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா?
>By Dr.M.S.வசந்தகுமார்.(லண்டன்). (SELECTED)
ஜாமக்காரனின் முகவுரை
மரித்த ஆவிகளைக்குறித்து வாசகர்கள் வாசிக்குமுன் பிசாசைக்குறித்து நீங்கள் அறியவேண்டும்.
தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர். லூசிபர். இந்த பெயரை நம் வேதபுத்தகத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மூலபாஷை வேதபுத்தகத்தில் மட்டும் லூசிபர் என்று பெயரை குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது.
முதலாம் தூதன்தான் லூசிபர்
இரண்டாம் தூதனின் பெயர் காப்பிரியேல்
மூன்றாம் தூதனின் பெயர் மிகாயேல்
லூசிபர் என்ற தூதனை ஏதேன் தோட்டத்தில் காவல்காக்க வைத்த விவரம் எசே 28:11-15ல் காணலாம். அப்போது லூசிபர் தன் உள்ளத்தில், தன்னை தேவனுக்கு சமமாக்க முயற்சித்ததையும் அது தேவனுக்கு கோபம் உண்டாக்கியதையும் ஏசா 14:11-15ல் வாசிக்கலாம். அதனால் தேவன் லூசிபர் என்ற தூதனையும் அவனோடு உள்ள தூதகணங்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார்.
துரத்திவிடப்பட்ட லூசிபர் என்ற தூதன்தான் பிசாசு அல்லது தேவனுக்கு எதிரானவன் - சத்துரு - அதர்மமூர்த்தி - எதிர்கிறிஸ்து - அந்திகிறிஸ்து என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதால் தேவன்மேல் கோபம்கொண்டு தேவன் உண்டாக்கிய மனிதர்களை தேவனிடமிருந்து பிரிக்க பல வஞ்சக ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறான். அப்படி மக்களை ஏமாற்ற செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான். செத்துப்போன ஆ(வி)த்துமாக்களின் பெயரில் ஊழியர்கள் மூலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகும்.
இப்போது தமிழ்நாட்டில் இந்த ஊழியங்கள்தான் அதிகமாக காணப்படுகிறது. இதனால் எத்தனை ஆயிரம் மக்கள் பயந்துக்கொண்டும், தைரியமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த கட்டுரையை எழுதியவர் லண்டனில் உள்ள வேத ஆராய்ச்சி செய்யும் Dr.M.S.வசந்தகுமார் என்பவர் ஆவார். இவர் எழுதிய இந்த மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? என்ற கட்டுரை உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று இதை வெளியிடுகிறேன். இனி மற்ற விவரங்களை தொடர்ந்து வாசியுங்கள். எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய செய்தி. ஆகையால் இந்த ஆராய்ச்சி கட்டுரையை தொடர் கதையைப்போல் துண்டுதுண்டாக வெளியிடாமல் முழுமையாக நீங்கள் படித்து அறிய வேண்டும் என்பதற்காக அதிக பக்கங்களை இந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு என்று ஒதுக்கியிருக்கிறேன்.மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கமுடியுமா?
கிறிஸ்தவர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று, மரித்த மனிதர்களின் ஆவிகளைப்பற்றியதாகும். அதாவது, "மரித்த உறவினர்கள், மூதாதையர்களின் ஆவிகளினால் உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு ஆலோசனைகளும், ஆவிக்குரிய வழிநடத்துதல்களும் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்க முடியுமா?" என்பது பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஒரு கேள்வியாகவே உள்ளது. சில கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள பாரம்பரிய நம்பிக்கைகளினதும் பிற மதச்சிந்தனைகளினதும் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக, மரித்தோரின் ஆவிகள் தங்களோடு தொடர்புக்கொள்வதாகவும், தங்களுக்கு மரித்தோரின் ஆவிகளின் மூலம் ஆலோசனைகளும் வழிநடத்துதல்களும் கிடைப்பதாகவும் கூறிவருகின்றனர். மரித்தோரின் ஆவிகள் தங்களுடைய வாழ்வில் அற்புதங்கள் செய்வதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவர்கள் மத்தியில், மரித்த பக்தர்கள் கனவில் வருவதுப்பற்றியும், நேரடியாகக் காட்சியளிப்பது பற்றியும், அவர்கள் உயிரோடிருப்பவர்களுக்குப் பலதரப்பட்ட ஆசீர்வாதங்களையும், ஆலோசனைகளையும் அருள்வதைப் பற்றியும் பலவிதமான பாரம்பரியக் கதைகளும் உள்ளன. எனவே, மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியுமா? என்பதற்கும், அவைகளினால் உயிரோடிருப்பவர்களுக்கு நன்மையளிக்க முடியுமா? என்பதற்கும் வேதாகமத்தில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்துப்பார்க்க வேண்டியது அவசியமாயுள்ளது.
கிறிஸ்தவ உபதேசங்கள், நம்பிக்கைகள், நடத்தை முறைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது தேவனுடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமமே! எனவே, வேதாகமத்திற்கு முரணான எந்த ஒரு நம்பிக்கையும் உபதேசமும், நம்பகமானதும், சரியானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. நாம் சகல உபதேசங்களையும், நமக்கு கொடுக்கப்படுகின்ற ஆலோசனைகளையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது வேதாகமம் நமக்கு கொடுத்துள்ள ஒரு முக்கியமான கட்டளையாகும். இதனால்தான் "பிரியமானவர்களே, உலகத்திலே அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" (1யோவா 4:1) என்று அறிவுறுத்தும் வேதாகமம், சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிதானிக்கப் படவேண்டும் என்றும் கூறுகிறது (1கொரி 14:29). எனவே தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை அடிப்படையாகக்கொண்டு தீர்க்கதரிசனங்களைச் சோதித்துப் பார்த்து நலமானதை ஏற்றுக்கொள்ளவும் பொல்லாங்காய்த் தோன்றுகிறவைகளை நிராகரிக்கவும் நாம் அறிந்திருக்கவேண்டும் (1தெச 5:20,22). இத்தகைய தன்மை ஒருவனுக்கு இல்லாதிருந்தால், அவனுடைய கிறிஸ்தவ விசுவாசம் உண்மையானதாக இராது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவிக்குரிய நிஜத்தையும் போலியையும் வேறு பிரித்து அறியக்கூடிய ஆற்றுலுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆவிகளை சோதித்தறியும்படி வேதாகமம் கட்டளையிட்டுள்ளது. உண்மையில், இத்தகைய மனிதர்களே மெய்யான கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.இதனால்தான், பிரசங்கிக்கப்பட்ட தேவ வசனத்தை மனோவாஞ்சையாய் ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தவர்கள் நற்குணசாலிகளாக இருந்தார்கள் என்பதை அப்போஸ்தலர் 17:11 அறியத்தருகின்றது. இவ்வசனத்தில் "ஆராய்ந்து பார்த்தல்" என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், நீதிபதி வழக்கை விசாரித்து உண்மையைக் கண்டறிவதைக் குறிப்பிடும் சொல்லாக உள்ளது. எனவே, ஒரு நீதிபதியைப்போல, தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின்மூலம், மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கவும், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் முடியுமா? என்று இந்நூலில் ஆராய்ந்து பார்ப்போம்.
http://www.jamakaran.com/tam/2009/february/aavi.htm