மாற்கு எழுதிய நற்செய்தி நூலின் 7 ம் அதிகாரம் 24 ம் வசனம் முதல் 29 வரையுள்ள வேத வசனப் பகுதி அநேகருக்கு ஒரு இடறலாக இருக்கிறது; மாற்று சமுதாயத்திலிருந்து உதவி வேண்டி வந்த ஒரு பரிதாபத்துக்குரிய பெண்ணை இயேசு(வானவர்) “நாய்” என்று சொல்லி அவமானப்படுத்தி விட்டாரே, இப்படிப்பட்டவர் ‘போற்றத்தக்கவர்தானா’ என சிலர் ஐயம் எழுப்புகின்றனர்;
இயேசு(வானவர்) யூத மார்க்கத்திலிருந்து அறியப்பட்டவராக இருப்பினும் யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; யூதரைப் பொருத்தவரை அவர் அந்நியராகவே கருதப்பட்டார்; காரணம் அவர் யூதருடைய ஆச்சாரமான சமய சடங்குகளைக் கண்டித்ததாலும் யூதர்கள் வெறுக்கும் சமுதாயத்தினருடன் அவர் கலந்துற வாடியதினாலும் யூதர்கள் அவரை வெறுத்தனர்;
இந்நிலையில் இயேசு(வானவரின்)பயணத் தடங்களை ஆராய்ந்தாலும் அவர் ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுடனே புழங்கி வந்தது தெரியவருகிறது; இது போன்றதொரு சூழ்நிலையில் தான் ஒரு மாற்று சமுதாயப் பெண்மணி இயேசு(வானவரின்) அருமை பெருமைகளைக் குறித்து கேள்விப்பட்டு ஒரு காரியத்தை சாதித்துக் கொள்ள அவரிடம் வருகிறாள்;
அவளிடமும் சரி வேறு யாரிடமும் சரி இயேசு(வானவர்) தன்னை தேவன் என்றும் மகா சக்தி என்றும் சுயபெருமை பேசியதில்லை; அவரது செயல்களை உணர்ந்து மக்கள் தாமாகவே புரிந்து கொள்ளவேண்டுமென்றே அவர் விரும்பினார்;
காரணம் அவர் இந்த பூமியில் ஒரு மார்க்கத்தையோ இராஜ்யத்தையோ ஸ்தாபிக்க வரவில்லை; எனவே புகழ் பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர் எதையும் செய்யவில்லை; இயேசு(வானவர்) ஒரு அற்புதமும் செய்ததில்லை; அவர் தேவையுள்ளவருக்கு உதவி செய்தார்; அதற்குக் காரணமாக இருந்தது அவருடைய மனதுருக்கம்; ஆனால் அவருடைய மனதுருக்கத்தின் விளைவு சாதாரண மனிதர்களுக்கு அற்புதம் போலிருந்தது;
தாம் வந்த காரணத்தை அவரே சொல்லும் போது “இழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்தார்” என்கிறார்; எனவே இயேசு(வானவர்)மனுஷனாக இந்த உலகுக்கு வந்தபோது முன்பதாக முடிவுசெய்யப்பட்ட ஒரு தெய்வீக திட்டத்தை நிறைவேற்றும் ஒரே ஒரு நோக்கத்துடன் மாத்திரமே செயல்பட்டார் என்பது விளங்கும்; அது சிருஷ்டி கர்த்தாவுடன் பிளவுபட்ட மனித உறவை சரி செய்வது மாத்திரமே; எனவே இயேசு (வானவரை)இந்த கருத்துடன் பார்த்து அவரிடம் வந்தோர் மிகச்சிலர் என்பதும் விளங்குகிறது;
இந்த குறிப்பிட்ட கிரேக்க பெண்மணியின் காரியத்திலும் கூட நாம் நிகழ்ச்சியினைக் கூர்ந்து கவனிப்போமானால் அங்கே அவர் தம்மை ஒரு யூதராக வெளிப்படுத்துகிறார்; காரணம் யூதர்களின் மார்க்க நம்பிக்கையின் படி அவர்களுடைய “யாவே” தேவனைப் பற்றிய பெருமை மிகுந்த எண்ணங்களால் மற்றவர்களை “நாய்” என்று தான் சொல்லுவார்கள்; அவர்களிடம் மார்க்க வெறி இருந்த அளவுக்கு தேவ அன்பு இல்லை என்பது வேறு விஷயம்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் யூதர்களை நேசித்த அளவுக்கு அவர்கள் அவரை நேசித்து அவருக்கு உண்மையாக இருக்கவில்லை;
இந்த சூழ்நிலையில் ஒரு கிரேக்க பெண்மணி தன் மகளுக்கு சுகம் வேண்டி இயேசு(வானவரிடம்)விண்ணப்பிக்கிறாள்; அவளை இயேசு(வானவர்)ஒரு யூதனைப் போல அணுகினாலும் சுகத்தைப் பெற்றுக் கொள்ள மார்க்கமோ வர்க்க வேறுபாடுகளோ தடையில்லை என்று நிரூபிக்க விரும்பினார்; அவள் மனதிலிருந்த ‘தான் ஒரு கிரேக்க பெண்மணி’ என்ற உணர்வை அகற்ற விரும்பினார்;
கிரேக்கர்கள் பேய் பிசாசுகளை நம்புவதைவிட தங்கள் ஞானத்தையும் படைபலத்தையும் கலாச்சாரத்தையுமே பெருமையாக எண்ணினார்கள்; அந்த பாரம்பரியத்தில் வந்த ஒரு பெண்ணுக்கே இந்த பிரச்சினை வருகிறது என்றால் அதனை யார் தீர்க்கமுடியும்;
இந்த இடத்தில் அந்த கிரேக்க பெண்மணியின் செயல்பாடுகளை கவனிப்போமானால் அவள் பிரச்சினைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டாள்; அதனை மேற்கொள்ளும் வழியினைத் தேடினாள்; அதற்குத் தடையாக எதுவும் இல்லாதபடி விசுவாசத்தை மட்டுமே முன்னெடுத்துச் சென்றாள்; “வார்த்தை வெளிப்பட்டது; சுகம் கிடைத்தது; சந்தோஷம் உண்டானது”
“பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே மனுஷகுமாரன் வெளிப்பட்டார்” எனும் வார்த்தையும் இங்கே நிறைவேறியது.
எனவே இயேசு போற்றத்தக்கவரே; இந்த பூமியில் பிறக்கும் முன்னரே தீர்க்கர்களால் முன்னறிவிக்கப்பட்டார்; பிறந்ததும் தூதர்களால் போற்றப்பட்டார்; மனிதர்களுக்குள் உலாவி நன்மை செய்கிறவராகச் சுற்றித் திரிந்து சிருஷ்டி கர்த்தாவாகிய பரம்பொருளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விண்ணுலகில் அமர்ந்திருக்கிறார்; காலம் நிறைவேறியதும் இந்த உலகை மாற்றியமைக்க மீண்டும் வரப்போகிறார்;
“மாரநாதா..!”