உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின்போது உலகம் முழுவதும் பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால் மரணமடைந்து விட்டது. இதை ஜெர்மனியில் பால் வைக்கப்பட்டிருந்த அக்வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது மிகவும் புகழ் பெற்றது பால். காரணம், முக்கியப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அது சரியாக அடையாளம் காட்டியதால்.ஆக்டோபஸ் பால் மொத்தம் எட்டு போட்டிகளின் வெற்றிகளை அடையாளம் காட்டியது பால். அதில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெல்லும் என்பதும் அடக்கம். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அதேபோல அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி தோற்கும் என்றும் அடையாளம் காட்டியது பால். இதைக் கேட்டதும் ஜெர்மனி ரசிகர்கள் கொதிப்படைந்து விட்டனர். பாலை பொறித்து சாப்பிட வேண்டும், கொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கூறினர். ஆனால் கடைசியில் பால் சொன்னதே நடந்தது.
இப்படி சரியான கணிப்புகளை கூறிய பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. ஜெர்மனியின் ஓபர்ஹாசன் சீ லைப் சென்டரில்தான் பால் வைக்கப்பட்டிருந்தது. பாலின் மரணம் குறித்து அந்த அக்வாரியத்தின் அறிக்கை கூறுகையில், நாங்கள் அனைவரும் ஆக்டோபஸ் பாலின் மரணத்தைக் கண்டு சிதறுண்டு போயுள்ளோம். பாலின் மரணத்தை உலகுக்கு துக்கத்துடன் அறிவிக்கிறோம்.
உலகம் முழுவதும் குறுகிய காலத்தில் புகழ் பெற்றது பால். குறிப்பாக ஜெர்மனி ஆடிய அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும், இறுதிப் போட்டி முடிவையும் முன் கூட்டியே சரியாக அடையாளம் காட்டியது பால். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை விட பால் கூறிய கணிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றன. நாங்கள் அனைவரும் பால் மீது மிகுந்த பிரியத்துடனும், பாசத்துடனும் இருந்தோம். பாலின் மறைவு எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலகக் கோப்பைப் போட்டியின்போது ஜெர்மனி ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய நடத்திய கணிப்பில் பால் கலந்து கொண்டது. அதன்படி இரு தொட்டிகளை வைத்து அதற்குள் ஜெர்மனி மற்றும் எதிரணியின் கொடிகளை வைத்திருந்தனர். அந்த இரு தொட்டிகளையும் பால் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வைத்தனர்.
பின்னர் இரு தொட்டிகளில் எதில், பால் போய் பரவி நிற்கிறதோ அந்த கொடிக்குரிய அணியே வெற்றி பெறும் என்பது கணிப்பு. இந்தக் கணிப்புகள் அனைத்தும் சரியாக இருந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மரணமடைந்த பாலின் உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் அக்வாரிய நிர்வாகிகள் வைத்துள்ளனர். அதை விரைவில் அக்வாரிய வளாகத்திற்குள்ளேயே அடக்கம் செய்யவுள்ளனராம். அந்த இடத்தில் சிறிய நினைவிடத்தையும் அமைக்கப் போகிறார்களாம். பால் மறைந்தாலும் அதற்கு ஒரு சிஷ்யரையும் ஏற்கனவே தேடிப் பிடித்து விட்டனர் அக்வாரிய நிர்வாகிகள். அதற்கு பால் ஜூனியர் என பெயர் சூட்டப் போகிறார்களாம். | | |