எங்கே போனது கிறித்துவ தமிழிசை..?
தமிழ் கிறித்துவத்தின் -ஏன் தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கே காரணமாக அமைந்ததுதான்,கிறித்துவத் தமிழிசை.
இந்த மாபெரும் இறைப்பணியில் தங்கள் நலனையும் நிலபுலனையும் இழந்தும் அதைப் பொருட்படுத்தாது எண்ணற்ற தமிழ் சான்றோர்கள் தொண்டாற்றினார்கள்;அவர்களில் நீங்கா புகழுடன் நின்றுவிட்ட வேதநாயகம் சாஸ்திரியார் முதற்கொண்டு ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை வரை பலருடைய அரிய சாதனைகளையும் படைப்பின் பெருமைகளையும் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
உதாரணத்துக்கு வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களைப் பற்றியதான தகவல்கள் அநேகருக்குத் தெரியாது;திசம்பர் திங்கள் என்றாலே கர்நாடக இசைக் கச்சேரிகளால் அரங்கங்கள் நிரம்பி வழியும்.அந்த கச்சேரி மேடைகளின் பின்னணியில் கவனித்தால் "கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்" புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும்.அதில் தியாகராஜ சுவாமிகள் என்பவர் முக்கியமானவர்.அவருடைய சம காலத்தவர் தான் நம்முடைய சங்கீத ஜாம்பவான் வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள்.
இவர் தியாகராஜருக்கு சற்றும் குறையாத திறமையாளர். அவரைவிட சற்று ஞானத்தெளிவில் உயர்ந்தவர் என்றும் சொல்லலாம்.அவருடைய பாடல்களை இன்றும் CSI சபைகளில் பாடுகிறோம்.திருத்துவ சத்தியத்தினையும் சுவிசேடத்தினையும் தெளிவுபட உரைத்தன அவருடைய பாடல்கள்.அவர் கிறித்துவின் பால் கொண்ட அன்பினால் ஏற்றுக் கொண்ட இன்னல்கள்,அவமானங்கள் ஏராளம்,ஏராளம்.
அவர் தஞ்சை சரபோஜி மன்னரின் அவையினை அலங்கரித்தவர்.இத்தனை சிறப்புகள் அவருக்கு இருந்தும் அவர் கர்நாடக இசை உலகிலோ அரசாங்கங்களாலோ பேசப்படவில்லை,புகழப்படவில்லை;காரணம்,அவர் கிறித்துவை மாத்திரம் புகழ்ந்து பாடினவர்.ஆனால் அவரைவிட விஷய ஞானம் குறைந்தோர் கூட பெரும்பான்மை சமூகத்தை சார்ந்திருந்ததால் பெருமையடைந்தனர்.
ஆனால் இத்தனை பாடுபட்ட வளர்த்த "வேர்களை" மறந்து தமிழ் கிறித்தவம் வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது என்பது சென்ற நூற்றாண்டுகளில் பிறந்து இன்றும் நம்மிடையே வாழும் பெரியவர்களின் உள்ளக் குமுறல்..!
கிறிஸ்தவர்களுக்கு இலக்கியத் தமிழ் ஒரு பிரச்னையாக உருவாகியுள்ளது. தமிழ்க் கல்வியின் அவசியம் போகப் போக மங்கி வருகிறது. அதனால் பாடல் வரிகளின் உள்ளான அர்த்தங்களைப் புரிந்து கொள்ள தவறி விடுகிறார்கள்.
ஒரு தேசத்தை அழிக்க யுத்தம் செய்யவேண்டாம்,மொழியையும் கலாச்சாரத்தையும் அழித்தாலே போதும்.இங்கே மொழி மட்டும் சிதைக்கப்படவில்லை;அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தியாகிகளின் உழைப்பும் மிதிக்கப்படுகிறது.நான் தமிழினத்தைப் பற்றிப் பேச வரவில்லை;தமிழ்க் கிறிஸ்தவர்களை மட்டுமே ஆராய்கிறேன்.
யூதன் தனது தாய் மொழியினைக் காத்ததாலேயே தன் தேசத்தினை மீண்டும் அடைந்தான்,மொழிதான் மக்களை இணைக்கிறது. நமது சமூகத்தில் நாம் இன்றைக்கும் காணலாம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் வடமொழி பேசுவோர் வீட்டுக்குள் அந்த தாய் மொழியைத் தான் பேசுவார்கள்;இதனால் அவர்கள் எதிலும் குறைந்துவிடவில்லை.
இன்றைக்கு இஸ்லாமியர் நமது மொழியாக்க வேதாகமத்தினை எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்கள்;ஆனாலும் பரிசுத்த வேதாகமம் அவரவர் மொழியில் கிட்டிருப்பது எத்தனைப் பெரிய பாக்கியம்..!அது அவ்வாறு கொடுக்கப்படக் காரணமே,அதன் பொருளை உணர்வுபூர்வமானதாகக் கொள்ளவேண்டும் என்பதும் வேதத்தை அறிய மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதும் தான்.
இப்படியாக சென்ற நூற்றாண்டின் சான்றோர்கள்,அறிஞர்கள் மொழி வளர்ச்சினையும் வளத்தினையும் கருத்தில் கொண்டே செயல்பட்டார்கள்.நமது நோக்கம் சுவிசேடப் பணியானால் அதனை வெற்றிக் கொணரும் காரியமாக்குவது மொழிதான்.நாம் அறிந்த வண்ணமாக இயல்,இசை,நாடகம் எனும் மூன்று தளங்களிலிருந்து நாம் பணியாற்றமுடியும்.இதனை தமிழ்(கிறித்துவ) சமுதாயத்தில் ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றால் என்ன?இதற்கான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழ் மொழியினைக் காக்க ஒருபுறம் தமிழறிஞர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.நமக்கும் கூட அப்படி ஒரு நெருக்கம் வந்திருக்கிறது.அதற்கொரு உதாரணம்:தமிழ் வேதாகமத்துக்கான தட்டுப்பாடு மற்றும் வேதாகம சங்கத்தின் கடுமையான நிதி நெருக்கடி.
சென்ற நூற்றாண்டு முழுவதும் அயல்நாட்டில் அன்றாட வேலை செய்து பிழைக்கும் எண்ணற்ற தேவ பிள்ளைகளின் தியாகமான உதாரத்துவமான காணிக்கைகளினால் நமக்கு சலுகை விலையில் தமிழ்மொழியில் வேதாகமம் வழங்கப்பட்டு வந்தது.ஆனால் அது போன்ற உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி வந்த அயல்நாட்டு ஸ்தாபனம்,தனது உதவிகளை நிறுத்திக் கொண்டதாம்.தற்போது" இந்திய வேதாகம சங்கம் "தனது தேவைகளுக்கு இந்திய -தமிழ்க் கிறிஸ்தவர்களையே முழுவதும் நம்பியுள்ளது.
இப்படியாக மொழிக்காகப் பணியாற்ற நாம் விழிப்புணர்வு கொள்வோமானால் சுவிசேடப் பணி வேகப்படும்.இறைப்பணி நிறைவடையும்.
இதற்கு எளிமையான தீர்வுகள் உண்டு:
1. முதலாவது மொழிப்பற்று தேவை
2. அடுத்து முயற்சி தேவை
3. பிரபலமான (அந்நிய)ஆட்சி மொழிகளைப் பற்றிய பிரமிப்பு
ஒழியவேண்டும்
அந்த தீர்வுகளைக் குறித்து சற்று ஆராய்வோமாக:
1. மொழிப்பற்று தேவை
மொழியைக் குறித்து சொல்லும்போது தாய்மொழி என்கிறோம்; ஆம்,மொழியினைக் காப்பதில் பெரும்பங்காற்ற வேண்டியதான கடமை, அன்னையைத் தான் சாரும்.ஒரு குழந்தை வளர்ந்த பிறகும் தனது தாய் கற்றுக்கொடுத்தவற்றை நினைத்து பெருமைக் கொள்வதோடு இந்த தொடர்புதான் தாய்ப்பாசமாக மிளிர்கிறது.பொருளீட்ட எடுக்கும் முயற்சிதான் வேற்றுமொழிக் கலாச்சாரத்தில் நம்மைச் சிக்கவைக்கிறது.பிறகு அந்த செல்வ மிதப்பில்(சிலர்..!)தாய் நாட்டையும் தாய் மொழியையும் ஏன்,தாயையும்கூட மறந்து போகிறோம்.சீனாவோ ஜப்பானோ கொரியாவோ (மொழியினைக் காத்ததால் நிமிர்ந்து நிற்கிறது) மேற்கத்திய மொழிக் கலாச்சாரத்தினால் இத்தனை மேன்மையடையவில்லை.
2. முயற்சி தேவை
"முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" எனும் முதுமொழிக் கேற்ப மொழிக்காக சற்று முயற்சி செய்வோமெனில் மேன்மை நிச்சயம்; பாருங்கள், பழமொழி மற்றும் முதுமொழிகளை அடிக்கடி சொல்வதாலும் மொழிவளம் காப்பாற்றப்படும். நான் அதிகம் படிக்கவில்லை,இலக்கணம் தெரியாது,ஆனால் எனது பள்ளிப்பருவத்தில் கல்விச் சாலைக்குச் செல்லாமலே தமிழைக் கற்க வேதாகமம் தான் உதவியது.
ஆம்,எனது பெற்றோர் என்னைப் பள்ளியில் சேர்க்காவிட்டாலும்(வறுமை..!) வீட்டிலேயே அரிச்சுவடியினைக் கற்றுக் கொடுத்து கையில் வேதப் புத்தகத்தினைத் திணித்தனர்.பொழுதுபோக்காகவே வேதத்தினை வாசிக்கத் துவங்கி எனது 7வது வயதிற்குள் வேதத்தை வாசித்து முடித்தேன்.காரணம் நான் கிறிஸ்தவன் என்பதால் அல்ல,நான் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சொந்தங்களால் கைவிடப்பட்ட குடும்பம், எனவே சொந்தங்கள் போக்குவரத்து விருந்துகள் கிடையாது,பள்ளிக்கும் செல்லாததால் நிறைய நேரம் கிடைத்தது.
அடுத்த கட்டத்தில் நூலகம் மீது எனது கவனம் செல்ல அங்கும் நிறைய கற்றுக் கொண்டேன்.13வது வயதிலேயே தகப்பனாரை இழந்துவிட்டதால் என்னைக் கட்டுப்படுத்தவும் யாரும் இருந்ததில்லை.இன்று திரும்பிப் பார்க்கிறேன், இதெல்லாம் (மொழிவளம்)எப்படி என, காரணம் சிறுவயது முதல் நான் (படிக்கக்கூடாததையும் சேர்த்து..!) படித்ததுதான்.
எனவே நிறைய படிக்கவேண்டும், படிக்க ஆர்வம் வேண்டும்,ஆர்வத்தைத் தூண்டுவதில் பெரும்பங்கு,வீட்டில் தாயாரையும் வெளியில் நண்பர்களையுமே சாரும்.
மற்றுமொரு எளிய வாய்ப்புமுண்டு..,
என்னைப் போன்ற தமிழ் ஆர்வமுடையோரை அழைத்து பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்து நடத்தலாம்.நான் தமிழ் வேதாகமத்தில் தேர்ச்சி பெற்று, தமிழ்க் கிறிஸ்தவப் பாடகனாகச் சிறப்பு பெற்று, முழுநேரமாக ஊழியம் செய்து வருகிறேன்;அதனையும் இலவசமாகவே செய்து கொண்டிருக்கிறேன். இலக்கியப் பணியினையும் செய்கிறேன்.நான் யோசிக்கிறேன்,நமது தாய்மொழியில் பேசி, பாடி,பிரார்த்தனை செய்வோருக்கு(தட்டுப்பாடு இல்லை..!) மதிப்பான நாட்கள் வருகிறது.
3. பிரபலமான (அந்நிய)ஆட்சி மொழிகளைப் பற்றிய பிரமிப்பு ஒழியவேண்டும்
பெரும்பான்மையோர் பேசும் மொழியிலே தேர்ச்சி பெறவேண்டியது நல்லதுதான்;ஆனால் அதுவே தாழ்வு மனப்பான்மையாக உருவெடுக்கக் கூடாது.அது அந்த புதிய மொழியினைக் கற்கவும் தடையாகவே அமையும்;இதனால் நமது தாய் மொழியின் மீதும் வெறுப்பு ஏற்படும்.நமது தாய் மொழியினை வெறுத்து அல்லது தவிர்த்து விட்டு வேற்று மொழியினை மட்டுமே சார்ந்திருக்க முயன்றால் நமது தாய் மொழியினை இழப்பதோடு சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து இயந்திர மனிதனைப் போன்று மாறிவிடும் ஆபத்து உண்டு.தாய் மொழியில் சிந்திப்பவனையே உலகம் கவிஞனாகவும் கலைஞனாகவும் ஞானியாகவும் பதிவுசெய்து கொண்டு வரலாற்று நாயகனுமாக்கி பெருமிதம் கொள்ளுகிறது.(இதில் சில விதி விலக்குகளும் இருக்கலாம்..!)
இறுதியாக ஒன்றை சொல்லியாக வேண்டும்.,
இன்றைய கிறிஸ்தவ இசையின் ஆதாரம்,தேவ பக்தியாக இல்லாதபடி தனது பெயர் புகழ்தான் நோக்கமாக இருக்கிறது."போட்ட காசை எடுக்கவேண்டுமே" என்ற பதைப்பு தான் அங்கே தெரிகிறது.இதனால் பிரபல சினிமா இசையமைப்பாளர்களை அமர்த்திக் கொள்கிறார்கள்;அவர்களோ தாங்கள் சினிமாவுக்காக யோசித்த மெட்டுகளையும் ரிதம் ஸ்டைலையும் இங்கே எடுத்துவிட "நம்ம ஐயா"வும் ஆஹா,ஓஹோ என பணத்தைக் கொட்டுவார்.,"டைம்" கூடி வந்து "போட்ட காசை"யும் எடுத்துவிட்டால், அப்புறமென்ன ரெண்டு தரப்புக்கும் சந்தோஷம்தான்..!அந்த இசையைக் கேட்பவர் நிலை? அவருக்கென்ன ஏற்கனவே வெளியிலும்(ரேடியோ) சினிமாவிலும் கேட்ட ஸ்டைல், ஆதலால் உடனே பிடித்துப் போகும்;சபையிலும் வந்து தானே "ட்ராக்" போட்டுப் பாடுவார்,"ஆவி" பயங்கரமாக வந்து இறங்கும்; அது "எந்த ஆவி" என்பதனை அந்த ஆவியானவர் தான் வந்து சொல்லவேண்டும்.
தேவப் பிரஸன்னத்தினை நமது ஆன்மா உணர உதவும் சில குறிப்பிட்ட ராக,தாள,பல்லவி அமைப்பு முறைகள் உண்டு. உண்மையான கர்நாடக இசைக் கலைஞர்கள் எத்தனைக் கோடி ரூபாய் கொடுத்தாலும் சினிமாவில் பாடுவதில்லை;அதுபோன்றதொரு அர்ப்பணம் நம்மிடையில்லை.ஒவ்வொரு மதமும் தங்கள் தெய்வத்தை தியானிக்க தனி இசை பாரம்பரியத்தினைக் கடைபிடிக்கிறது. கிறிஸ்தவ இசை எது என்பது சினிமா இசையமைப்பாளர்களுக்கும் நன்கு தெரியும்; (காரணம்,அவர்களில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள்..!)ஆனாலும் "குத்துப் பாட்டு" ஸ்டைலைக் கேட்டுப் பெறுவது நம்ம ஆட்கள் தான்.
எனவே தாய்த் தமிழில் கிறித்தவ இசை மற்றும் இலக்கியங்கள் வளரவேண்டுமானால் நமது முன்னோர்களின் அடிச்சுவடுகளை நோக்கி நாம் திரும்புவதோடு நமது தலைமுறையினருக்கும் இதனை அவசர செய்தியாகக் கொண்டுச் செல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
திருத்துவ தேவன் தாமே நமக்கு அருள் புரிவாராக..!