praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)
Showing posts with label "அவதரித்தல்". Show all posts
Showing posts with label "அவதரித்தல்". Show all posts

Thursday, December 24, 2009

விண்ணும் மண்ணும் சந்தித்த அற்புதம்..!












மண்ணவரை விண்ணவராக்க மன்னவர் வந்தார்
கண்ணவரென சொன்னவர் அவர் என்னவர் ஆனார்


கண்மணி விண்மணி பொன்மணி இத்தரை வந்தார்
நித்திரை ஆழ்ந்தவர் திரைவிலக்கி முத்திரை யானார்


கொண்டாடி கூத்தாடி போட்டுடைத்தோரை திண்டாடி
மன்றாடி பூட்டுடைத்தாரடி கொண்டாடி ஞானப்பெண்ணே


கொற்றவரும் மற்றவரும் திகைத்திட
கற்றவரும் சிற்றாரும் மலைத்திட
மாபெரும் ஞாயிறு உதித்ததன்றோ


ஏழைக்கு பெலனாம் எளியவரின் திடனாம்
புயலுக்கு புகலிடமாம் குளிருக்கு மறைவிடமாம்
வெயிலுக்கு குளிர்நிழலாம் கவிதையில் என்ன சொல்ல‌



Please follow me...

Wednesday, December 16, 2009

எனது டைரிக் குறிப்பு:-

எனது டைரிக் குறிப்பு:  


இன்று காலை துர்காவை சந்தித்தேன்; அவள் கடந்த சில மாதத்துக்கு முன்பு தனக்காக‌ பிரார்த்தனைக்காக செய்ய என்னைத் தொடர்பு கொண்டாள்;அது ஒரு சுவாரசியமான நிகழ்வு;அதனைக் குறித்து நிறைய எழுதவேண்டும்; இன்று அவள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதற்கு நான் உள்ளூற தடுமாறினாலும் தடம் மாறாமல் அளித்த பதில் திருப்திகரமாக இருந்தது;  


அவள் கேட்ட கேள்வி,ஏன் கிறிஸ்தவத்தில் இத்தனை பிரிவுகள்?  


இது வழக்கமாக அனைத்து மார்க்கத்தவரும் கேட்கும் கேள்விதான்;அவர்கள் மார்க்கத்தில் எத்தனையோ பிரிவுகளிருப்பினும் கிறிஸ்தவ மார்க்கம் (மட்டுவாவது..?) பிரிவுகள் இல்லாததாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம்;  


முதலில் பொதுவானதொரு பதிலைச் சொன்னேன்; இது அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம்;இதில் எது சரி என்று எளிதாகச் சொல்லமுடியாது;ஏனெனில் ஒவ்வொன்றும் நம்பிக்கை சார்ந்த காரியம்;  


ஆனாலும் வேதம் இதற்கு தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது;வேதம் கடவுளின் தன்மையையும் அவரை அடையும் வகையையும் சொல்லித் தருகிறது;வேதம் என்பது பயின்று நிறைவேற்ற வேண்டியதாகும்; ஆனால் கடவுள் என்றதுமே தொழுகையே முதலிடம் பிடிக்கிறது;காரணம் வாழ்க்கையின் தேவைகள்;தொழுகை அவசியமானாலும் அதுவே போதுமானதல்ல;  


இதைக் குறித்த தெளிவு இல்லாததால் மனிதன் இரண்டு தவறு செய்தான்; ஒன்று, கடவுளை சிருஷ்டிகளுக்கு இணை வைத்தான்; இதனால் அவரைத் தாழ்த்தினான்; இரண்டு, எல்லாவற்றுக்கும் அதிகாரியான மனிதன் தன்னை விட தாழ்ந்த சிருஷ்டிகளை- தனக்குப் பணியாளாகக் கடவுள் சிருஷ்டித்தவற்றைப் பணிந்துக் கொண்டதால் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டான்;  


இப்படி கடவுளையும் தாழ்த்தி தன்னையும் சிறுமைப்படுத்திக் கொண்டதால் கடவுளை அடையும் வாசல் அடைபட்டது;  


இதற்குக் காரணமாக அமைந்தது,மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருந்த சுயாதீனம்;இந்த சுய ஆளுமையினை தன்னாட்சியினை கடவுளுக்கு எதிர் வல்லமையிடம் இழந்ததால் அடிமைத்தனமும் பயமும் பிரிவினையும் மரணமும் வந்தது;சாவாமையுள்ள மனிதன் வாழ்வியல் அச்சங்களால் பீடிக்கப்பட்டான்;  


அடுத்த சவால் மெய்ப்பொருளை அடைய வேண்டும்; மெய்ப்பொருளான பரம்பொருளை எளிதில் அடையும் வாசல் அடைபட்டதால் மாற்றுவழியினைத் தேடும் மனிதனுக்கு முன்பாக இரண்டு கேள்வி உண்டு;  
ஒன்று கடவுளின் தன்மை என்ன? இரண்டு அவரை அடையும் வழி என்ன? அதாவது கடவுளை எப்படி புரிந்துக் கொள்ளுவது என்பதும் அவரை எப்படி அடைவது என்பதும் ஆதார நோக்கமாக இருக்கிறது;  


ஏனெனில் கடவுள் மனிதனை சிருஷ்டித்ததால் அந்த பரம்பொருளைக் குறித்த தேடலும் ஏக்கமும் ஆராய்ச்சியும் இயல்பாகவே மனிதனிடம் நிறைந்திருக்கிறது;  


ஆனாலும் எதிரியினால் திரையிடப்பட்ட‌ பிரிவினையாகிய தோஷம் நீங்காமல் பரிசுத்தமான இறைவனை அறிய முடியாது;அதற்கு ஒரு பரிகாரம் செய்தாக வேண்டும்;அந்த பரிகாரத்தை மனிதன் சார்பாக யாராவது செய்யவேண்டும்;அதனைச் செய்பவர் பாவதோஷமில்லாதவராக இருக்கவேண்டும்;  


இந்த விதிமுறையின்படி அன்புள்ள இறைவனே ஒரு ஏற்பாட்டைச் செய்தார்;தம்முடைய திரு வார்த்தையையே மனுடாவதாரத்தில் இந்த உலகுக்கு அனுப்பினார்;அவர் மூலம் பாவ மன்னிப்பாகிய மீட்பை அவருடைய மாசில்லாத இரத்தத்தின் மூலம் உண்டு பண்ண அவர் தாமே கிருபாதார பலியானார்;
 
ஆம்,ஜீவாதிபதி ஜீவனைத் தந்து நம்மை மீட்டுக்கொண்டார்; அவரே ஜீவனுக்கு அதிபதியாதலால் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார்;அவர் வழியாக பரம்பொருளை அடையும் வழி புதுப்பிக்கப்பட்டது;  


இதோ "கிறிஸ்மஸ்" எனும் பண்டிகையினைக் கொண்டாடுகிறோம்; "கிறிஸ்மஸ்" சொல்லும் சேதி என்ன,நம்மை மீட்க இறைவன் அன்புடன் அனுப்பிய கிருபாதாரபலி அவதரித்த நாள்; "அவதரித்தல்" என்னும் சொல்லே "மேலிருந்து கீழாக" என்று அர்த்தமாம்;  


ஆம்,இயேசு என்னும் இறை மைந்தன் விண்ணகத்திலிருந்து மண்ணகத்துக்கு வந்து நாம் விண்ணகம் சேரும் வழி வகையினை ஏற்படுத்தினார்,என்பதே நற்செய்தி..!  


துர்காவுக்கு எனது பதிலால் பரம திருப்தி;அதிலும் மனதால் இறைவனுடன் ஒன்றித்து இருப்பதே தியான அனுபவம்,அதுவே அனைத்து வெற்றிகளுக்கு ஆதாரம் என்று நான் சொன்னது மிகவும் சந்தோஷமாம்;  


ஏனெனில் தனியாக நேரமெடுத்து பிரார்த்தனை செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம்;ஆலயத்துக்கும் செல்லமுடியாது;வீட்டிலும் பிரார்த்தனை செய்யமுடியாது;இந்த நிலையில் நான் கூறிய எளிமையான வழிமுறை துர்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.